ஜாதியை ஒழிக்கவே முடியாதா? ஜாதிகளே இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாதா?
ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று என் தாத்தாவின் அப்பா காலத்திலிருந்து பேசப்படுகிறது. இதை ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். உண்மையில் இந்த கருந்து புத்தர் காலத்திலிருந்து ஆரம்பித்துவிட்டது. ஆனால் இன்று வரை ஜாதி ஒழிந்த பாடில்லை. இந்திய புராணம் ஒன்றில் ரத்த பிஜ அரக்கன் என்று ஒருவன் காட்டப்படுகிறான் அவனை வெட்டினால் அவனது உடலிருந்து வருகின்ற ஒவ்வொரு துளி ரத்தமும் அவனை போலவே பல அரக்கர்களை உருவாக்குமாம். ஏறக்குறைய ஜாதியும் அப்படி தான் இருக்கிறது. ஒரு பக்கம் அதை துரத்தினால் இன்னொரு பக்கம் பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகிறது. உண்மையில் ஜாதியை ஒழிக்கவே முடியாதா? ஜாதிகளே இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாதா? என்று தணியும் ஜாதி என்ற நெருப்பு.
நமது அரசியல்வாதிகளிடம் சென்று இந்த கேள்விகளை கேட்டால் பன்நெடுங்காலமாக இதற்கு தானே பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எப்படியும் வெற்றி பெற்று விடலாம், நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று பல நூறு வருஷமாக கூறி வருகின்றனர். பொருளாதார மேதைகளிடம் சென்று இந்த கேள்வியை வைக்கும் பட்சத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் வருவாயும் அதிகரிக்கும் போது தானாகவே ஜாதி என்ற நெருப்பு அனைந்து விடும் என்கிறார்கள். பணத்தாலும் படிப்பாலும் உயர்ந்து விட்ட பிறகும் பெருவாரியான மனிதர்கள் ஜாதி பற்றுதலை விடவில்லையே என்று அவர்களிடம் திருப்பி கேட்டால் நீண்ட மௌனத்தை தான் பதிலாக தருகிறார்கள். வேதாந்தம் பேசுகின்றனர்,
ஜாதி ஒழிந்து விட்டால் பல பேருடைய பிழைப்பு நடக்காது பதவியில் உட்கார்ந்து கொண்டு ஆனந்த பூங்காற்றை அனுபவிக்க முடியாது. அதனால் ஒரு கையில் துப்பாக்கியும் இன்னொரு கையில் அமைதி புறாவும் வைத்திருக்கும் சந்தர்ப்பவாத சர்வதிகாரிகள் போல் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று மேடை போட்டு பேசிக் கொண்டே ஜாதி ஊர்வலங்களுக்கு பட்டுகம்பளம் விரிக்கிறார்கள். என் இனத்தார்க்காக பாடுபடுவதே நான் பிறவி எடுத்ததன் நோக்கமென்று நெஞ்சை நிமிர்த்தி அறைகூவல் விடுவது கூட வெட்கமாக படவில்லை, வெற்றி முரசாகப்படுகிறது.
பண்டையகால சமூக வரலாற்றை உன்னிப்பாக கவனிக்கும் போது இந்த கருத்து சரியாக தான் இருக்குமோ என்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது, ஆனால் கீழ் ஜாதி பெண்கள் மாராப்பு அணிய கூடாது, மேல்ஜாதிகாரர்களிடம் பேச நேரிட்டால் 25 அடி தூரமாவது தள்ளி நின்று பேச வேண்டும். ஊர் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க கூடாது, பொது பாதையில் நடக்ககூடாது செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு போடகூடாது கொட்டாங் குச்சியில் தான் தேநீர் அருந்த வேண்டும் என்றெல்லாம் ஆயிரமாயிரம் மனித தன்மையற்ற கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடைபெறும் போது நல்ல மனிதர்களின் அடிவயிறு பற்றிஎரிகிறது , எப்பாடுபட்டாவது ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று உடம்பும் மனதும் துடிதுடிக்கின்றது.
மேல்ஜாதிகாரர்களின் கொடுமையை கண்டு கீழ் ஜாதிகாரர்கள் பொங்கி எழும் போது ஆராவாரம் செய்து வரவேற்க தோன்றும் அதே நேரத்தில் தற்கால ஜாதிபோராட்டங்கள் நமது வயிற்றில் புளியை கரைக்கிறது. அரசு வேலை வாய்ப்பில் எங்கள் ஜாதிக்கு இத்தனை சதவிகிதத்தை ஒதுக்கிட வேண்டுமென்று கோரிக்கை கூட நியாமானது தான். ஆனால் அந்த லட்சியத்தை அடைய அவர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றதாக இல்லை. அந்தந்த ஜாதிகாரர்களே வெட்கி தலை குனியும் வண்ணம் பல நேரங்களில் அவர்களின் செயல்கள் அமைந்து விடுகிறது. கடைகளை சூறையாடுவதும், பேருந்துகளை தீ வைத்து கொளூத்துவதும், கட்டிடங்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை ஒட ஒட அடித்து விரட்டுவதும் வார்த்தைகளால் எழுத முடியாத அபாச சொற்களை பயன்படுத்துவதும் கண்டு நமது நெஞ்சு பொறுக்கவில்லை.
இன்று ஜாதிக்கொரு தலைவர்கள் இருக்கிறார்கள். அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு விலை மதிக்க முடியாத மரங்களை சாலை நடுவில் வெட்டி வீழ்த்தி, பொது ஜனங்களுக்கு இடையில் கலகத்தை உருவாக்கி, உயிர் , சேதங்களை ஏற்படுத்தி, கட்சியை வளர்த்து அரசு பதவிகளை பிடித்து கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து தங்களது தோட்ட மாளிகைகளை பளிங்குகளால் மெழுகி, ஜாதிகாரர்களுக்கு கொடுக்க வேண்டிய அமைச்சர் பதவிகளை தங்களது சொந்த பந்தங்களுக்கு மட்டுமே கொடுத்து ஏற்றி விட்ட ஜாதிமக்களை எட்டி உதைத்து யார் அதிகம் இடம் தருகிறார்களோ அந்த கட்சிகளோடு கொள்கை கோட்பாடுகளை பற்றி கவலையில்லாமல் கூட்டணி வைத்து தங்களது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ளும் தலைவர்கள் ஒரு பக்கம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உழைப்பேன் என்று களமிறங்கி தலைமை பதவியை தக்க வைத்து கொள்ள படாதபாடுபட்டு தன் ஜாதிகாரர்களையும் கைவிட்டு தன்னையும் நிலை நிறுத்தி கொள்ளாமல் பரிதவித்து நிற்கம் தலைவர்கள் இன்னொரு பக்கம், இந்த தலைவர்கள் பாழ்பட்டு கிடக்கும் தங்கள் சமூகம் வாழ்விப்பதற்காக எதையாவது செய்யமாட்டார்களா என்று ஏங்கி எதிர்பார்த்து கோஷம் போட்டு கூடிய இளைஞர் கூட்டம் திசை தெரியாது தவிப்பது வேறொரு பக்கம்.
ஜாதிக்காக உழைக்கிறேன் என்று கிளம்பி விட்ட இந்த தலைவர்களால் அழிக்கப்பட வேண்டிய ஜாதி மரம் தழைத்து ஒங்கி வளர்கிறது, எந்த வித ஒளிவும் மறைவும் இல்லாமல் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டு மென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஆதிதிராவிட மக்களுக்கும், வன்னியர் இன மக்களுக்கும் எந்த பகைமையும் இருந்தது கிடையாது. தெற்கு பகுதியில் தேவேந்திர குலவேளாளர் மக்களுக்கும் மற்ற ஜாதிகாரர்களுக்கும் பெரியளவில் சண்டை சச்சரவுகள் கிடையாது, என்று ராமதாஸ் , கிருஷ்ணசாமி, திருமாவளவன் போன்ற தலைவர்கள் உருவானர்களோஅன்று பிடித்தது சமூக அமைதிக்கு சனி, இந்த தலைவர்களின் வருகையால் அப்பாவி மக்கள் எந்த பயனையும் அடைந்தது இல்லை, மாறாக இந்த தலைவர்களின் செல்வாக்கும், செல்வவளமும் தான் அதிகரித்து இருக்கிறது.
முன்று தலைவர்களின் பெயர்களை மட்டும் நான் குறிப்பிட்டதனால் ஜாதிவெறியை வளர்ப்பது அவர்கள் மூவரும் தான் என யாரும் தவறுதலாக நினைக்க வேண்டாம், இன்று இந்தியாவில் இருக்கின்ற அரசியல்கட்சி தலைவர்கள் அனைவருமே ஜாதி பாகுபாட்டை மறைமுகமாகவோ நேர்முகமாகவோ வளர்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பொதுவுடமை பேசும் கம்னியூஸ்ட் கட்சியாக இருக்கட்டும்;, தேசியம் பேசும் காங்கிரஸ் மற்றும் பா.ஜா.க கட்சிகளாக இருக்கட்டும் பிராந்திய பிரச்சனைகளை முன்னிறுத்தும் மாநில கட்சிகளாக இருக்கட்டும் எல்லோருமே தேர்தல் இல்லாத காலங்களில் ஜாதி சமத்துவம் பேசியும், தேர்தல் காலங்களில் ஜாதியின் வலுவை பேசியுமே வருகிறார்கள். ஒரு தொகுதியில் உண்மையான கட்சி தொண்டர்கள் யார் என்று பார்த்து தேர்தலில் நிறுத்துவதை விட தொகுதியில் எந்த ஜாதிவலு அந்த ஜாதிக்காரனை வேட்பாளாராக அறிவிப்பது தான் நடைமுறை அரசியலாக இருக்கிறது, தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை சேகரிக்க பணம் கொடுக்கப்படுகிறது, மது கொடுக்கப்படுகிறது என்பதை விட நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்ந ஜாதிகாரர்களுக்கு சலுகைகள் வழங்குவோம், இன்ன ஜாதிகாரர்களை அரசியல் ரீதியாக ஒரம் கட்டுவோம் என்ற வகையில் விஷமம் வளர்க்கப்படுகிறது.
இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதி பிரிவுகள் இருக்கிறது என்பதும் அறியாமையான கருத்தாகும். மனிதர்கள் எல்லோரும் சகோதர்களே என்று போதித்த முகமது நபி அவர்கள் உருவாக்கிய இஸ்லாம் மதத்தில் கூட ஷியா, சன்னி என்ற ஜாதிபிரிவுகள் உள்ளன. இந்தியாவின் தென்பகுதி முஸ்லிம் இடத்தில் பட்டானி, ராவுத்தர் மரக்கியார், லப்பை, மாப்பிள்ளை, என ஜாதிபிவுகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது, கிறிஸ்த்துவ மதம் கூட உலக அளவிலும் சரி , இந்திய அளவிலும் சரி, பல ஜாதி வகைகளை தனக்குள் அடக்கமாகவே கொண்டுள்ளது கிறிஸ்த்துவ ஜாதி போராட்டத்திற்கு பலசம்பவங்களை உதாரணமாக சொல்லலாம் என்றாலும் தென்னிந்திய திருசபையின் தலைமை பொறுப்புகளுக்கு எந்த தலித் கிறிஸ்த்துவர்களும் சுலபமாக வந்து விட முடியாது, ரெட்டியார் மற்றும் நாடார் ஜாதி கிறிஸ்த்துவர்களின் ஆதிக்கம் அங்கு ஏராளம்.
ஆக நமது நாட்டில் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு ஜாதி வெறியை வளர்த்து கொண்டிருக்கிறார்கள், எல்லாம் சரி, ஜாதியை ஒழிக்க என்ன தான் வழி என்று மண்டையை போட்டு உடைக்கிறீர்களா? அதெல்லாம் தேவையற்றது, ஜாதியை ஒழிப்பது ஒன்றும் ஆகாயத்தை வில்லாக வளைப்பது, மணலை கயிராக திரிப்பது போன்று நடைபெறாத விஷயம் இல்லை, ஆட்சியாளர்கள் மனது வைத்தால் இரண்டு மணி நேரத்தில் ஜாதியை ஒழித்து விடலாம், ஜாதியாக இருக்கட்டும் அல்லது மற்ற சமூக கேடுகளாகட்டும் எல்லாமே பொருளாதார நலத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான் எனவே சொந்த ஜாதிகளுக்குள் திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை இல்லை , கலப்புத்திருமணம் செய்து கொண்டால் தான் அரசு வேலை, மற்றும் தலைவர், கவுண்சிலர் MLA , MP ஆகிய பதவிகளில் போட்டியிடுபவர்கள் கட்டாயம் கலப்புத்திருமணம் கொண்டவர்க்களுக்குத்தான் இடம் என்று சொல்லுங்கள் ஜாதி நாலடைவில் தானாக ஒழியும். கலப்புத்திருமணம் செய்து கொண்டால் தான் எந்த ஜாதியும் பார்காமல் நடுனிலையாக செயல்பட முடியும் .
என்று சிறியதாக ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தாலே ஜாதி பஞ்சாக பறந்துவிடும். இதை செய்ய போவது யார்?